தாசில்தாரிடம் கிறிஸ்தவர்கள் மனு
தாராபுரத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி தாசில்தாரிடம் கிறிஸ்தவர்கள் மனு;
தாராபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராமலிங்கத்திடம் எஸ்.காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- தாராபுரத்தை அடுத்த சூரியநல்லூர் எஸ்.காஞ்சிபுரம் கிராமத்தில் தென்னிந்திய திருச்சபை மற்றும் கிறிஸ்தவ தேவாலயம், கிறிஸ்தவ மக்களுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு கிறிஸ்தவ மக்கள் குடியிருந்து வருகிறார்கள். ஆனால் அந்த நிலத்தை, பிற ஊர்களை சேர்ந்த 50 பேருக்கு அரசு இலவச பட்டா வழங்கி உள்ளது. தென்னிந்திய திருச்சபை நிலத்தில் பட்டா கொடுப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். அப்படி பட்டா கொடுக்கும் பட்சத்தில், தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த கிறிஸ்துவ மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லை என்றால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.