மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: அறுவடை பணி பாதிப்பு
சீதாவரம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அங்கு குவியலாக வைக்கப்பட்டுள்ள நெல் சேதமடையும் சூழ்நிலை உள்ளது;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் அரும்புலியூர் ஊராட்சியில், கரும்பாக்கம், சீதாபுரம், அரும்புலியூர், பேரணக்காவூர் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு சொர்ணவாரி பருவத்தில், 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். அவை அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்தன. இந்நிலையில், உத்திரமேரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று நாட்களாக, இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில், அரும்புலியூர், சீதாபுரம், காவணிபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதனால், அவற்றை எவ்வாறு அறுவடை செய்வது என, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அத்துடன், சீதாவரம் பகுதியில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அங்கு குவியலாக வைக்கப்பட்டுள்ள நெல் சேதமடையும் சூழ்நிலை உள்ளது.