மழையில் நனையும் நெல் கவலையில் விவசாயிகள்

கொள்முதல் நிலையம் சகதியாக மாறி விடுவதால், நெல்லை உலரச் செய்ய இடம் இல்லாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்;

Update: 2025-09-22 08:53 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு மற்றும் ஏரி, கிணற்று பாசனம் மூலம் விவசாயிகள் ஆண்டு முழுக்க நெல் பயிரிடுகின்றனர். நவரை பருவத்தை தொடர்ந்து, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சொர்ணவாரி பருவத்திற்கு பயிரிட்ட நெல்லை தற்போது விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடையான நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து விற்பனை செய்கின்றனர். இதற்காக தற்போது 30க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களாக மாவட்டம் முழுக்க பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மழை பெய்கிறது. இந்த மழையால் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல் நனைந்து சேதமாவதோடு, முளைப்பு ஏற்படும் நெல் விற்பனை செய்ய முடியாமல் வீணாகின்றன. மேலும், கொள்முதல் நிலையம் சகதியாக மாறி விடுவதால், நெல்லை உலரச் செய்ய இடம் இல்லாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே, விவசாயிகள் நலன் கருதி கொள்முதல் நிலையங்களில் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும். நெல் ஏற்றிச் செல்லும் லாரிகளை அதிகப்படுத்தி தர, சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Similar News