உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியது. 3-ம் திருவிழாவான நேற்று மாலை ஆன்மீக அருள் உரையும் இரவு பக்தி இன்னிசை கச்சேரியும் நடந்தது. அதன்பிறகு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கலைமான் வாகனத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிபிரகாரத்தைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனிவந்த நிகழ்ச்சி நடந்தது. கொட்டும் மழையில் பகவதி அம்மனின் வாகன பவனி நடந்தது. கோவிலின் கிழக்கு பக்கம் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பவனி 3-வது முறை பவனி வரும்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவார பாடல் பாடியபடி அம்மன் வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. 3-வது முறை கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகார மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி இருந்த வெள்ளி கலைமான் வாகனத்தை மூங்கில் தண்டையத்தில் அமரவைத்து தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பிறகு இறுதியாக தாலாட்டு பாடலுடன் கூடிய நாதஸ்வர இசையுடன் அம்மனின் வாகன பவனி நிறைவடைந்தது.