தோவாளை கிருஷ்ணன்புதூர் வெள்ளாளர் சமுதாயம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவில் நவராத்திரி மற்றும் தசரா மகிஷாசுர சம்கார விழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது. நேற்று காலையில் அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து வித்யாரம்பமும் (ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி) நடைபெற்றது. பிற்பகல் 4.00 மணிக்கு பஞ்ச வாத்தியம், பூக்காவடி, சிங்காரி மேளம், நாசிக் டோல், மியூசிக் பேண்ட், டிரம்ஸ், கோலக்களி போன்ற இசைக்கருவிகளின் இசை முழக்கத்துடன் ஸ்ரீ முத்தாரம்மன் போர்க்களத்திற்கு எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மகிஷாசுரன் முன்னே செல்ல, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முத்தாரம்மன் பின்தொடர்ந்து மெயின் ரோடு வழியாக துரத்தி சென்று மாலை 6.00 மணிக்கு திருமலை முருகன் கோவில் அடிவாரத்தில் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தார். அச்சமயம் மாபெரும் வாணவேடிக்கையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், பின்னர் அம்பாள் ரத வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாட்டை தோவாளை கிருஷ்ணன்புதூர் மகிஷாசுர சம்சார விழா குழுவினர் செய்திருந்தனர். மகிஷாசுர சம்ஹார நிகழ்ச்சியையொட்டி தோவாளை தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.