தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு : போலீசார் விசாரணை
சாத்தான்குளத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ;
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் முதலூர் சாலையைச் சேர்ந்தவர் குமார் மகன் சக்திவேல் (11). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனராம். இந்த நிலையில், வீட்டிற்குள் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து சக்திவேல் மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டாராம். அவரை மீட்டு, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.