தேவூரில் அருட்பெரும்ஜோதி வள்ளலார் ராமலிங்க அடிகளாரின்

203 -வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்;

Update: 2025-10-06 05:39 GMT
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில், அருட்பெரும்ஜோதி வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் 203-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மனிதநேய உணர்வை மையப்படுத்திய பெரும் சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என மனித நேயத்தின் உச்சநிலையை எடுத்துரைத்த வள்ளலாரின் நினைவாக, தேவூர் சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில், கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து மூலிகை கஞ்சி மற்றும் அறுசுவை உணவு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தச் சேவை மரபைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு சங்கத் தலைவர் நேசன் மற்றும் செயலாளர் பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை நேரத்தில் திருப்புகழ், திருவாசகம், மற்றும் வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்கள் ஒலிக்க விழா தொடங்கியது. வள்ளலார் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பள்ளி மாணவ, மாணவிகளுக்காக பரதநாட்டியம், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில், சிறந்த திறமையாளர்களுக்கு சங்க நிர்வாகிகள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, பசித்தோருக்கு. உணவு வழங்கும் அறுசுவை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மூலிகை கஞ்சி மற்றும் சத்தான அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தேவூர், இராதாமங்கலம், இருக்கை, காக்கழனி, கீழ்வேளூர், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாலை நேரத்தில் ஆரூர் “நதியா குழு” சார்பில் வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் அருள்நெறியை விளக்கும் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பாடல், நடனம் மற்றும் நாடக வடிவில் வள்ளலாரின் தத்துவங்கள் அரங்கேற்றப்பட்டன. நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பொதுமக்கள், “பசியைத் தீர்ப்பதே உயர்ந்த வழிபாடு” என வள்ளலார் போதித்த கருணை வழியில் சுத்த சன்மார்க்க சங்கம் தொடர்ந்து செயல்படுவதற்கு பாராட்டுத் தெரிவித்தனர். நிகழ்ச்சி நிறைவில், அனைவரும் வள்ளலார் திருவுருவம் முன் தீபம் ஏற்றி, “அன்பே சிவம் – அருளே வாழ்வு” என்ற வள்ளலாரின் அருள்மொழியை உருக்கமாக உரைத்தனர். மனித நேயமும், சேவையும் ஒன்றாக இணைந்த தேவூர் வள்ளலார் விழா, பசியைத் தீர்க்கும் அன்பின் பெருவிழாவாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. நிகழ்ச்சியில், சங்க செயற்குழு உறுப்பினர்கள் பூமிநாதன், வீராசெந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News