தென்காசி அருகே தெருநாய்கள் கடித்ததில் உயிரிழப்பு
தெருநாய்கள் கடித்ததில் உயிரிழப்பு;
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலைகளில் அதிக அளவில் சுற்றி திரிவதோடு மட்டும் இல்லாமல் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளை கடிப்பதும் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதியில் வசித்து வரும் மாரியப்பன் (50) என்பவர் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் சாலையில் சுற்றி திரிந்த தெருநாய்கள் இவரை கடித்துள்ளதாக கூறப்படுகிறது.இதில் படுகாயமடைந்த இவர் வீட்டிலே சிகிச்சை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து உறவினர்கள் இவரை தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பேரூராட்சி பகுதியில் இரவு மற்றும் பகல் நேரங்களில் பொதுமக்கள் அச்சுறுத்தும் விதமாக சாலைகளில் சுற்றி திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இது போன்ற தெருநாய்கள் கடிக்கு பொதுமக்கள் உள்ளாகுவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது.