குமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (39). வாள் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவர் அகில இந்திய அளவில் நடந்த வாள் விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றவர். மேலும் ஜெர்மனியில் நடைபெற்ற வாள் விளையாட்டு போட்டியில் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது தலைமையில் தற்போது ஒரு அணியினர் ஆற்றூர் பகுதியில் நடைபெற்ற மாநில வாள் விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் ஆற்றூர் தோட்டவாரம் பகுதியை சேர்ந்த ஜிஷோ நிதி என்பவர் தலைமையிலான அணியும் பங்கேற்றது. இந்த இரு அணியினருக்கும் வெற்றி புள்ளிகள் அறிவித்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திடீரென மோதலாக மாறியது. இதில் செல்வகுமாரை வாளால் எதிர்தரப்பினர் வெட்டியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்தவர் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜிஷோநிதி தரப்பை சேர்ந்த ஜினோநிதி என்பவரும் காயத்துடன் குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் திருவட்டாறு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.