ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
மாத உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வழங்ககோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.;
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூபாய் 6 ஆயிரம், அதிகம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 10 ஆயிரமும், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 15 ஆயிரம் என நிர்ணயம் செய்து உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.