தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றியத் தேர்தல்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றியத் தேர்தல்;
குமாரபாளையத்தில் நடந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பள்ளிபாளையம் ஒன்றியத் தேர்தல் குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. ஒன்றியத் தேர்தல் அலுவலராக திருச்செங்கோடு முன்னாள் ஒன்றிய செயலாளர் கார்த்திக் நியமிக்கப்பட்டுதேர்தலை நடத்தினார். பள்ளிபாளையம் ஒன்றியத் தேர்தலில் கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒன்றியத் தலைவர் கண்ணன் , ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார், ஒன்றியப் பொருளாளர் சத்தியமூர்த்தி, கொள்கை விளக்கச் செயலாளர் கார்த்திகேயனி, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் புஷ்பலதா, இலக்கிய அணி அமைப்பாளர் கௌசல்யாமணி, இளைஞரணி அமைப்பாளர் சுதா, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்தழகு நாச்சியார், உள்ளிட்ட 16 பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்..ஒன்றியத் தேர்தலுக்கு பிறகு ஒன்றியப் பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றியத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ரவிக்குமார் வரவேற்றார். முன்னாள் ஒன்றியச் செயலாளர் இளையராஜா , மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல், மாவட்டப் பொருளாளர் பிரபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் சங்கர் பேசினார். மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். ஒன்றிய துணைத் தலைவர் நர்மதா நன்றி கூறினார். தேர்தல் கால வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அமல்படுத்திடல் வேண்டும். மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும், அண்ணா அவர்களின் காலம் முதல் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை தேர்தல் அறிக்கை படி தொடர்ந்து வழங்கிடவேண்டும். இதரப்பாடங்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகளை ரத்து செய்த தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து செய்துள்ளது. ஆகவே இதரப் பாடங்களில் உயர்கல்வி பயின்றவர்களுக்கு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து வழங்கிடவேண்டும். ஒன்றிய மற்றும் நகராட்சி பணிமூப்பினை பறித்து மாநில பணிமூப்பினை திணிக்கும் அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும். கட்டாய ஆசிரியர் தகுதித்தேர்வினை கைவிட்டு, பணியாற்றும் ஆசிரியர்களை பாதுகாத்திடவும் ,பணிமூப்பின் படி பதவி உயர்வு வழங்கிடவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். மாணவர்களின் கல்வி நலன் கருதி ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர், ஓட்டுச்சாவடி மைய அலுவலர் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் இருந்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் முற்றிலுமாக விடுவிக்கப்படுதல் வேண்டும். என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.