காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கைகலப்பு.
ஆரணியில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கட்சியின் மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில் நகரதலைவர் யார் என்று சலசலப்பு மற்றும் கைகலப்பு நடைபெற்றது.;
ஆரணி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆரணி செய்யார் வந்தவாசி போளூர் ஆகிய தொகுதிகளுக்கான கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஆரணி தனியார் மகாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத் தலைவர் பொன்னையன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் எஸ்.பிரசாத் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர்கள் ரங்கபாஷியம், சுப்ரமணியசாமி, முன்னாள் எம்எல்ஏ ராஜாபாபு, முன்னாள் மாவட்ட தலைவர் அண்ணாமலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், நகரமன்ற உறுப்பினர் ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திருவண்ணாமலை காங்கிரஸ் கட்சியின் வடக்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நாராயணசாமி சிற்பபு விருந்தினராக கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, புதிய மாவட்டத் தலைவர் தேர்வு செய்வது குறித்து பேசியபோது கட்சி நிர்வாகிகளிடையே இரு கோஷ்டியாக செயல்பட்டு ஆரம்பத்தில் இருந்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இதில் தற்போது உள்ள தலைவர் எஸ்.பிரசாத் மீது கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதனை, மாவட்ட பொறுப்பாளர் கட்சியினரரை சமரசம் செய்து, புதிய மாவட்ட தலைவர் தேர்வு செய்வது குறித்தும், மாவட்டத் தலைவருக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி பேசினார். முடிவில் தொகுதி பொறுப்பாளர் அருணகிரி நன்றி கூறி பேசினார். அப்போது, நகரத் தலைவர் ஜெயவேல் என குறிப்பிட்டு பேசினார். இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் கட்சியினர் சிலர் ஜெயவேலுவை நகர தலைவர் என சொல்ல கூடாது. அவர் முன்னாள் நகர தலைவர் மட்டுமே, கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்ட நகர தலைவராக ஜெ.பொன்னையனை நியமித்துள்ளது. அதனால் தற்போது நகர தலைவர் பொன்னையன்தான், அதனை மீறி நகர தலைவர் ஜெயவேல் என குறிப்பிட்டால் அவ்வளவு தான் என சண்டையிட்டு பேசினர். இதனால், மாவட்டத் தலைவர் ஆதரவாளர்களுக்கம், நகரத் தலைவர் ஆதவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசி திட்டிக் கொண்டு, இரு பிரிவினரிடையே தள்ளுமுள்ளு , சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட பொறுப்பாளர் நாராயணசாமி கட்சியின் இரு தரப்பினரையும் சமரசம் செய்து ஒன்றிணைந்து கட்சி பணிகள் ஆற்ற அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, செய்தியாளரிடம் அவர் கூறுகையில், திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத்தில் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடையே ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. அதேபோல், வடக்கு மாவட்டத்தில் உள்ள ஆரணி செய்யார், வந்தவாசி, போளூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளை, ஒவ்வொரு தொகுதி வாரியாக நேரில் அழைத்து, சந்தித்தும் மாவட்ட தலைவர் தேர்வு செய்வது தொடர்பாக வரும் டிசம்பர் 5 ம் தேதி வரை கட்சி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளது. மேலும் கட்சியை நிர்வாகிகளின் கருத்துக்களின் அடிப்படையில் மாவட்டத் தலைவர் பொறுப்பிற்கு யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளதோ அவர்களை தேர்வு செய்து, அந்த முடிவுகளை டிசம்பர் 8 ம் தேதி கட்சி தலைமைக்கு நான் அனுப்பி வைக்க உள்ளோன். மேலும், கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இரு கோஷ்டிகளாக இருந்து கொண்டு கூட்டத்தில் ஒற்றுமையை சிதைக்கும் வகையில் நடந்து கொண்ட விஷயம் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. கட்சியில் உள்ள பிரச்சினைகள் குறித்து கேட்கவும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்வதற்காகவும் கட்சியை வலுப்படுத்துவும் ஒவ்வொரு தொகுதி வாரியாக நிர்வாகிகளை நான் நேரில் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்பதற்காக கட்சி தலைமை என்னை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து அனுப்பி உள்ளது. இப்பிரச்சினை குறித்து பேசி முடிவு எடுக்கப்படும் என்றார். என இவ்வாறு தெரிவித்தார்.