மாவட்ட ஆட்சியரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த பழவேற்காடு பகுதி மக்கள் கூட்டம் நடத்தினர்
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச்சென்ற மீனவர்களை இழிவுபடுத்தியதாக கூறி மாவட்ட ஆட்சியரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த பழவேற்காடு பகுதி மக்கள் தீர்மானம்;
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்ற மீனவர்களை ஆட்சியர் இழிவுப்படுத்தியதாக கூறி ஆட்சியரை கண்டித்து மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். வரும் 1-ஆம் தேதி பழவேற்காட்டில் ஆட்சியரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிப்பு. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் பெரிய மாங்கோடு வரையிலான 8 ஊராட்சிகளை சேர்ந்த 50 மீனவ கிராம மக்கள் பழவேற்காட்டில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விடும் நாட்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு நிவாரணம் கேட்டும், பழவேற்காட்டில் உள்ள மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 21-ஆம் தேதி பழவேற்காடு மீனவர்கள் ஆட்சியரை சந்திக்க திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் சென்றதாகவும், அப்போது ஆட்சியர் மீனவர்களை அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்காமல் இழிவுபடுத்தி, அவமதித்து அனுப்பியதாகவும் கூறி பழவேற்காடு முதல் பெரிய மாங்கோடு வரையிலான 8 ஊராட்சிகளை சேர்ந்த மீனவர்கள் பழவேற்காட்டில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தி ஆட்சியருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். ஒட்டு மொத்தமாக பழவேற்காடு மீனவர்களை மாவட்ட ஆட்சியர் அவமதித்து விட்டதாக தெரிவித்து தீர்மானம் இயற்றினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், மனு கொடுக்க சென்ற போது, உள்ளே அனுமதிக்காமல் இழிவுப்படுத்தி ஒட்டு மொத்த பழவேற்காடு மீனவர்களை அவமதித்ததை கண்டித்து வரும் டிசம்பர் 1-ஆம் தேதி பழவேற்காட்டில் அனைத்து மீனவர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். மேலும் பழவேற்காட்டில் தற்போது இயங்கி வரும் அரசு மதுபான கடையை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், பழவேற்காட்டில் பறவைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மீனவர்களுக்கு அளிக்காமல் மீன்பிடித் தொழிலுக்கும் மீனவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வனத்துறை அதிகாரிகளை கண்டித்தும், அதிக மக்கள் தொகை உள்ள பழவேற்காட்டில் கூடுதலான வங்கி சேவையை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மீனவ கிராமங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.