சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோவில் நிர்வாகம்

சிருவாபுரி முருகன் திருக்கோவிலில் அன்னதான கூடத்தின் அருகே கழிவு நீர் சூழ்ந்திருக்கும் அவலம்;

Update: 2025-11-26 13:43 GMT
சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அன்னதான கூடத்தின் அருகே கழிவு நீர் சூழ்ந்திருக்கும் அவலம். பக்தர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோவில் நிர்வாகம். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் நீண்ட வரிசையில் சுமார் 2மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வாடிக்கை. புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர்.கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதான மண்டபத்தில் நாள்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அன்னதான கூடத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்னதான கூடத்தில் அமர்ந்து உணவருந்தும் போது துர்நாற்றத்தை பொறுத்துக் கொண்டும், பக்தர்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் செயல்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். டெங்கு,மலேரியா போன்ற பல்வேறு பாதிப்புகள் மக்களை வாட்டி வரக்கூடிய சூழலில், மனநிறைவு வேண்டி ஆலயத்திற்கு வந்து இறைவனின் வரப்பிரசாதமான அன்னதானத்தை உட்கொள்ளும் போதும் நோய்த்தொற்று ஏற்படும் வகையிலும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் கழிவுநீர் சூழ்ந்து இருப்பது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிறுவாபுரி முருகன் கோவிலில் அன்னதான கூடத்தை சுற்றிலும் தேங்கி நிற்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி பக்தர்களின் சுகாதாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News