கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்;
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 5வது வார்டு மணி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசித்து வரும் பகுதிக்கு சாலையில் இருந்து செல்வதற்கு பொது பாதை இல்லை என்பதால் பல வருடங்களாக மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக காணப்படுவதால் அங்கு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தங்களது குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல பொது பாதை அமைத்து அதில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பகுதி பொதுமக்கள் கடந்த நான்கு வருடங்களாக பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் சி.பி.ஐ.எம் கட்சியினருடன் சேர்ந்து கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலை வசதி அமைத்து தருவதாக கூறியதின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.