தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

பழவேற்காடு கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் இடைவிடாத கனமழை;

Update: 2025-12-01 11:32 GMT
தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரை பகுதியில் பலத்த காற்றுடன் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் எட்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான பழவேற்காடு ஏரி கடல் நீரால் முழுவதுமாக சூழப்பட்டு கடல் போல் காட்சி அளிக்கிறது. மேலும் காற்றின் வேகத்தால் அலைகள் வேகமாக எழும்பி கூனங்குப்பம் முதல் கோரைக் குப்பம் வரை ஆற்றுப்பகுதியில் வெள்ள நீர் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கூனங்குப்பத்தில் பழவேற்காடு ஏரி நீர் ஆற்றுப்பக்கம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்ததால் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியியை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி இயங்கிய நிலையிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. மேலும் அதே பகுதியில் வசிக்கும் ஐந்து பழங்குடி குடும்பத்தினர், வேகமாக வீசும் காற்றுடன் கூடிய மழையாலும், கடல் கொந்தளிப்பினாலும் கூரை வீடுகள் சேதமாகி குழந்தைகளுடன் குளிரில் நடுங்கியபடி ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். கடல் சீற்றம் காரணமாகவும் டிட்வா புயல் இன்னும் கரையை கடக்காத சூழலிலும் எட்டாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 5000க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் கரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பழவேற்காடு மீன் மார்க்கெட் வெறிச்சோடி கிடக்கிறது.

Similar News