குளித்தலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் இடுபொருட்கள் வழங்கும் விழா
ஆதி திராவிட விவசாயிகள் நல மேம்பாட்டிற்கான திட்டத்தின் மூலம் 250 விவசாயிகளுக்கு வழங்கல்;
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள தனியார் மஹாலில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் வேளாண் அறிவியல் மையம் மற்றும் புதுடெல்லி தேசிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்தும் ஆதிதிராவிட விவசாயிகள் நல மேம்பாட்டிற்கான திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பரளி மற்றும் வாலாந்தூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஹைதராபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இயக்குனர் ஷேக் மீரா, புது டெல்லி தேசிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் இயக்குனர் தங்கவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கரூர் வேளாண் அறிவியல் மையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் முனைவர் செல்வராஜன், மோகனூர் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் கம்பெனி நிர்வாக இயக்குனர் அஜீத்தன், கரூர் வேளாண் இணை இயக்குனர்.சிங்காரம், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பிரபாகரன் வேளாண் கல்லூரி முதன்மையர் பாலசுப்பிரமணியம் , கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பேராசிரியர் ஆனந்தராஜா, புதுடெல்லி விஞ்ஞானி ராக்கேஷ், சிறுகமணி வேளாண் அறிவியல் மையம் தலைவர் ராஜா பாபு, குளித்தலை வேளாண் உதவி இயக்குனர் குமரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நெல் மற்றும் வாழையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விவசாயக் குழுக்களுக்கு 2 பவர் டில்லர், 2 தீவனை புல் நறுக்கும் கருவி, 100 மருந்து தெளிப்பான், வாழை சாகுபடிக்கு ஏற்ற 86 மண்வெட்டி, 86 கடப்பாரை, 20 அரிவாள் போன்ற கருவிகள் விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழு பெண்களுக்கு 16 தையல் இயந்திரம் என ஆதிதிராவிட இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் நிதி உதவி பெற்று வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் இலவசமாக 250 விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியின் முடிவில் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் தமிழ்ச்செல்வி நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 275 விவசாயிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.