கோழித்தீவனம் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து.
கண்ணமங்கலம் அருகே கோழித்தீவனம் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து.;
ஆரணி கண்ணமங்கலம் அருகே கோழித்தீவனம் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்து. கிருஷ்ணகிரியிலிருந்து ஓட்டுநர் பிரபாகரன் என்பவர் படைவீடு, கமண்டலாபுரத்தில் உள்ள முத்து என்பவரின் கோழிப்பண்ணைக்காக தீவனம் ஏற்றி வந்துள்ளார். அப்போது இராமநாதபுரம் கூட்ரோட்டிலிருந்து கமண்டலாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது மல்லிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் வாழைத்தோப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியில் இருந்த கோழித்தீவன மூட்டைகள் சேதமடைந்தன. அத்துடன் வாழைமரங்களும் முறிந்து விழுந்தன. மேலும் இந்த விபத்து குறித்து அப்பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் அமுல்ராஜ் தெரிவித்ததாவது, இராமநாதபுரம் கூட்ரோட்டிலிருந்து மல்லிகாபுரம், இருளம்பாறை, தஞ்சான்பாறை, நடுவூர், சீராக்கொல்லை, கமண்டலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் மிகவும் குறுகியும் பழுதடைந்தும் காணப்பட்டது. இதைச் சீரமைக்க பல முறை வலியுறுத்தியும் படைவீடு ஊராட்சி நிருவாகம் கண்டுகொள்ளவில்லை. அத்துடன் மாவட்ட நிருவாகமும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. மேலும் பள்ளிப் பேருந்து, சரக்கு வாகனங்கள் உட்பட நான்கு வாகனங்கள் கடந்த காலங்களில் இச்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க உடனடியாக இச்சாலையை விரிவுபடுத்தி சீரமைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். பொதும்மக்களின் கோரிக்கையும் இவ்வாறே உள்ளது.