ராசிபுரம் அரிசி வியாபாரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது...
ராசிபுரம் அரிசி வியாபாரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரிசி வியாபாரி தொழில் போட்டி காரணமாக காரில் கடத்தி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு மூளையாக செயல்பட்ட கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்த ஹார்ஸ் விஜயகுமார் (49) என்பவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். ராசிபுரம் கோனேரிப்பட்டி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து என்பவர் மகன் லோகநாதன் (52) அரிசி வியாபாரி. இவர், பல ஆண்டுகளாக ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு பெற்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் இவருக்கும் சிலருக்கும் இடையை தொழில் போட்டி இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த நவ.29-ல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என ராசிபுரம் காவல் நிலையத்தில் அவரது மனைவி மணிமேகலை புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, நாமக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நல்லிப்பாளையம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தலையில் அடிபட்ட நிலையில் இருந்தது குறித்து தகவல் அறிந்து நல்லிப்பாளையம் போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ராசிபுரம் நகரில் காணாமல் போன ரேஷன் அரிசி வியாபாரி லோகநாதன் தான் கொலை செய்யப்பட்டு சாலையோரம் வீசப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. விசாரணையில் லோகநாதனை கொலை செய்தது ராசிபுரம் எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மணி, அவரது கூட்டாளி வைரமணி ஆகியோர் என தெரியவந்தது. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்த இருவரையும், ராசிபுரம் போலீஸார் கடந்த டிச.2-ல் கைது செய்தனர். தொழில் போட்டி காரணமாகவும், பெண் ஒருவர் தொடர்பாகவும், லோகநாதன், மணி ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாலும், இந்த கொலை நடந்தது தெரியவந்தது. லோகநாதனை காரில் கடத்தி தலையில் அடித்து கொலை செய்து சாலையோரம் வீசியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் இக்கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீஸார் வி்சாரணை நடத்தி வந்த நிலையில், இக்கொலைக்கு மூளையாக கட்டனாச்சம்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மகன் ஹார்ஸ் விஜயகுமார் (49) செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து விஜயகுமாரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.