மணப்பாறை அருகே அரசு பேருந்து - லாரி மோதிக் கொண்ட விபத்தில் சாலையில் சிதறிய தேங்காய்கள். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
மணப்பாறை அருகே அரசு பேருந்து - லாரி மோதிக் கொண்ட விபத்தில் சாலையில் சிதறிய தேங்காய்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூராணியில் இருந்து தேங்காய் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவு 1 மணியளவில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் சென்றபோது திடீரென ஓட்டுனர் லாரியை திருப்ப முயன்றதாக கூறப்படும் நிலையில் பின்னால் மன்னார்குடியில் இருந்து கம்பம் நோக்கி 38 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து லாரியின் பின்பகுதியில் மோதியதில் லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பேருந்து ஓட்டுனர் சிக்கிக் கொண்டார். இதையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஓட்டுனரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இதையடுத்து மணப்பாறை நகராட்சி தூய்மை பணியாளார்கள் உடனடியாக களத்தில் இறங்கி சாலையில் உடைந்து சிதறிக் கிடந்த கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை அகற்றிய தோடு சாலையில் உடைந்து கிடந்த தேங்காயும் அப்புறப்படுத்தினர். இதே போல் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுப்பட்டனர். இவ்விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, வரதராஜபுரத்தைச் சுரேஷ் (வயது 48) காயமடைந்த நிலையில் பேருந்தில் வந்த பயணிகள் ஒருசிலர் மட்டும் அதிஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். பயணிகள் அனைவரையும் போலீசார் அந்த வழியாக வந்த வேறு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.