தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 02.07.2025 முதல் 22.07.2025 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது

தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 02.07.2025 முதல் 22.07.2025 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது;

Update: 2025-06-28 13:17 GMT
கால்நடை வளர்ப்பின் மூலம் கால்நடைகளிலிருந்து கிடைக்கும் பால் மனிதர்களின் உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், மாமிசம், உரோமம் மற்றும் பிற உபபொருட்களின் மூலம் நாட்டிற்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டி கொடுப்பதால் நாட்டின் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பு பெரும் பங்கு வகிக்கிறது. கோமாரி நோய் நம் நாட்டில் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களை கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 02.07.2025 முதல் 22.07.2025 வரை 21 நாட்களுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. கோமாரி நோய் கால்நடை வளர்ப்போருக்கு அதிகப்படியான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கோமாரி நோய் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. பொதுவாக இந்நோய் பசு மற்றும் எருமைகளை அதிகம் பாதிக்கிறது. இந்த நோய் தாக்குதலால் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைகிறது. எருதுகளின் வேலை செய்யும் திறன் குறைகிறது. கறவை மாடுகள் சினை பிடிப்பது தடைபடுகிறது. இளம் கன்றுகளில் இறப்பு நேரிடுகிறது. கோமாரி நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், மேற்கண்ட பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். நோய் பரவ சாதகமான சூழ்நிலைகள் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம். நோய் பாதித்த இடங்களிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாதிருத்தல், நோய் பாதித்த கால்நடைகளை பிரித்து பராமரிக்காமல் இருத்தல். கலப்பின கால்நடைகளில் இந்நோயின் பாதிப்பு அதிகம் காணப்படும் . நோய் பரவும் விதம் :- இந்நோய் பாதித்த மாடுகளிலிருந்து மற்ற மாடுகளுக்கு நேரடியாக தொற்றும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து தீவனம், தீவனத்தட்டுகள், தண்ணீர் வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமூம் பரவும் . இந்த நச்சுயிரி மாட்டுக்கொட்டகைகளில் சுமார் 15 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். இந்நோய் விரைவாக காற்றின் மூலமூம் பரவும் தன்மை கொண்டது. பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் இந்த நோய் அதிகமான கால்நடைகளுக்கு பரவுகின்றது. நோய் அறிகுறிகள் : காய்ச்சல் , தீவனம் உட்கொள்ளாத மந்த நிலையில் இருக்கும். அசை போடாது. அதிகமான நீர் தாகம் இருக்கும். பால் உற்பத்தி குறையும். வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் நூல் போல் ஒழுகிய வண்ணம் இருக்கும். வாயின் உட்பகுதி, நாக்கு மற்றும் கால் குளம்புகளின் நடுப்பகுதி, மடி ஆகிய இடங்களில் கொப்புளங்கள் தோன்றும் . பின்பு அவை உடைந்து ரணமாகிவிடும். அசை போடும் போது மாடு சப்பை கொட்டுவது போல் சப்தம் உண்டாகும். சினை மாடுகளில் கருசிதைவு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட மாடுகளில் மலட்டுத்தன்மையும், இரத்த சோகையும் ஏற்படும். பாதிக்கப்பட்ட பசுக்களில் கன்றுகளை பால் குடிக்க விடக்கூடாது. அவ்வாறு குடித்தால் கன்றுகள் உடனடியாக இறக்க நேரிடும். தடுப்பூசி பணி :- சிறந்த பராமரிப்பும், தடுப்பூசி போடுவதும் இந்நோயினை தடுக்க உகந்த வழி. விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,45,700 பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 82 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 6 கால்நடை மருத்துவமனைகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 51 குழுக்கள் அமைக்கப்பட்டு, வருகின்ற 02.07.2025 முதல் 22.07.2025 வரை 21 நாட்களுக்கு தடுப்பூசிபணி இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இத்தடுப்பூசிப்பணி நான்கு மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகளுக்கும் மற்றும் நிறை மாத சினை இல்லாத மாடுகளுக்கும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை போடப்பட்டு வருகிறது. உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மக்களுக்கு இத்தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் வரும் பொழுது முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவசாயிகளுக்கு தங்களது கிராமத்தில் எந்த நாட்களில் தடுப்பூசி பணி நடைபெறும் என்ற விவரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தகத்தால் அக்கிராமத்திற்கு தெரிவிக்கப்படும் அல்லது பொது மக்கள் தங்கள் பகுதி கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். கோமாரி நோய் தடுப்பூசி முகாம் போடும் நாளில் விவசாயிகள் கால்நடை பராமரிப்புத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தவறாது தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா கேட்டுக்கொள்கிறார்.

Similar News