சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!
17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மகன் மணிகண்டன் (28). இவர் 17 வயது சிறுமியை காதலித்து, அந்த பெண்ணை கர்ப்பமாக்கி உள்ளார். இது தொடர்பாக கடந்த 20.11.2018 அன்று மணிகண்டனை சந்தித்து பேசிய அந்த பெண்ணை மட்டையால் அடித்து, அவதூறாக பேசி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை, தமிழ்நாடு பாதிக்கப்பட்ட குழந்தைகள் இழப்பீட்டு நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்கள் பி.ஜானகி, வி.எல்லம்மாள் ஆகியோர் ஆஜர் ஆனார்கள்..