தமிழ்நாடு அரசு விவசாய பணிகளின்போது மரணம் அடையும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

Update: 2024-08-27 10:38 GMT
தமிழ்நாடு அரசு விவசாய பணிகளின்போது மரணம் அடையும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஆண்டுதோறும் 10,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தான் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். மற்றொருபுறம் விவசாய பணிகளான தண்ணீர் கட்டுதல், களை எடுத்தல், கால்நடைகளை பராமரிப்பு செய்தல், இயந்திரங்களை பயன்படுத்துதல், தண்ணீர் இறைக்க மின்சாரத்தை பயன்படுத்துதல் ஆகிய செயல்களின்போதும் இறக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பாம்புகள் கடித்து இறத்தல், வெயிலில் வேலை செய்யும்போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இறத்தல், கால்நடைகள் முட்டி இறத்தல், தென்னை - பனை மரங்கள் ஏறும்போது விபத்து ஏற்பட்டு இறத்தல், இடி - மழை - மின்னல் தாக்கி இறத்தல் என பல்வேறு வகைகளில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் இறந்து வருகிறார்கள். இதுபோன்ற இறப்புகள் சாதாரண விபத்துகளாக காவல்துறையால் பதிவு செய்யப்படுகிறது, இவ்வாறு இறக்கும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருள் ஈட்டுவதற்கும், உழைப்பதற்கும் ஆளின்றி கடுமையான பின்னடைவை சந்தித்து, நிலத்தை விற்றுவிட்டு விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். இதில் விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களின் நிலைமை கடும் துயரமானது. கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், குவாரி விபத்துகளில் அடிபட்டு இறப்பவர்களுக்கு 3 லட்ச ரூபாயும் தமிழ்நாடு அரசின் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. ஆனால் நாட்டு மக்களுக்கு உணவு அளிப்பதற்காக நஷ்டம் வந்தாலும், கஷ்டம் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விவசாய பணியில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் இறக்க நேரிடும்போது மத்திய - மாநில அரசுகள் எவ்வித இழப்பீட்டையும் வழங்குவதில்லை. இதற்கான நிதியை திரட்டுவதற்காக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுபானங்களின் மீதும், விவசாய நில விற்பனை அல்லாத (வணிக) பத்திரப்பதிவுகளின் போதும் ஒரு சதவீத செஸ் வரியை விதித்து அதன் மூலம் வரும் நிதி ஆதாரத்தின் மூலம் கூடுதல் செலவினத்தை சமாளிக்க முடியும். எனவே தமிழ்நாடு அரசு அனைத்து வகையான விவசாயப் பணிகளின்போது இறக்கும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News