மண் சரிவால் 10 கிலோமீட்டர் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோரிக்கை

Update: 2024-11-04 05:38 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளது அகமலை ஊராட்சி.இந்த ஊராட்சி போடிநாயக்கனூர் தாலுகாவிற்கு உட்பட்டது என்றாலும் சாலை வசதி என்பது பெரியகுளம் சோத்துப்பாறை அணை வழியாகவே உள்ளது. இந்த ஊராட்சியில் கண்ணகரை, அலங்காரம், பட்டூர், பரப்பம்பூர், அண்ணா நகர், கரும்பாறை, குறவன் குழி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையால் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலைக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகளுக்கு செல்லும் மலை கிராம பள்ளி மாணவ, மாணவிகள் சாலையில் தேங்கியுள்ள மண் மற்றும் சகதிகளை கடந்தும், சாலையில் சரிந்துள்ள புதர்கள் மற்றும் மரங்களைக் கடந்து 10 கிலோமீட்டர் தொலைவுக்கு மேல் உள்ள தூரத்தை நடந்து பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மலை கிராம மக்களின் அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்குவதற்கும், விவசாய விளை பொருட்களை விற்பனைக்காக பெரியகுளத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, நடந்து செல்லவும் வழியில்லாத நிலை ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மலை கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் சேதம் அடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மலை கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News