சி.பி.எஸ்.இ அங்கீகாரம் இல்லாமல் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்: அரசு பள்ளியில் சேர்ப்பு
மாணவர்கள்;
பட்டுக்கோட்டையில், அங்கீகாரம் இல்லாமல், சி.பி.எஸ்.இ தேர்வு எழுத முடியாமல் தவித்த 19 மாணவர்கள், அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் மூலம் தேர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுவிக்காடு பிரைம் தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் 16 மாணவர்கள், 3 மாணவியர் என, 19 பேர் 10ஆம் வகுப்பு படித்தனர். ஆனால், சி.பி.எஸ்.இ. பள்ளிக்கான அங்கீகாரம் இல்லாததால், பொதுத்தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன், கடந்த பிப்.16 ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அப்போது, சமச்சீர் கல்வி மூலம் நடத்தப்படும் மாநிலக் கல்வி வாரியத் தேர்வு எழுதுவதற்கு 19 மாணவர்களுக்கும் சிறப்பு விதிகள் பெற்றுக் கொடுப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செயலரிடமும் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பெற்றோரிடம் தெரிவித்தார். அதன்படி, 19 மாணவர்களும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு மாநில பாடத்திட்டத்தில், தேர்வு எழுதும் வகையில், தனி வகுப்பறையை உருவாக்கி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி வி.சாரதி கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 44 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் விரைவில் சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்படும். மேலும், பிரைம் பள்ளிக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.