கோவை: பஹல்காம் தாக்குதல் -1008 மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி !
பஹல்காம் தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு கோவை இந்து முன்னணி சார்பாக 1008 மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.;
ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலில் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிகக் கொடிய தாக்குதல் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில் கோவை மாநகர் இந்து முன்னணி சார்பில், கோவை காந்தி பார்க் ரவுண்டானா பகுதியில், காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி இந்துக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மோட்ச தீபங்கள் ஏற்றி, செல்போன் விளக்குகளை ஒளிரச் செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கோவை மாநகர, மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.