கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.10.12 கோடி மாநகராட்சி முறைகேடு....
தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்: ரூ.19.48 கோடி நிலுவையில் உள்ளது - மேயர்;

தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றி வரும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், தஞ்சாவூர் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கடன் பெற்றுள்ளனர். இதற்காக மாநகராட்சி நிர்வாகம், கடன் மற்றும் வட்டித்தொகைக்காக, தூய்மைப் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, கூட்டுறவு கடன் சங்கத்திற்கு செலுத்த வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்த செய்த தொகையை முறையாக கூட்டுறவு சங்கத்தில் செலுத்தவில்லையாம். இதனால், தூய்மைப் பணியாளர்களுக்கு, கூட்டுறவு சங்கத்தில் இருந்து பணம் செலுத்துவதற்காக நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, கடந்த 2024 நவ.22 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டுறவு சங்கத்திற்கு முழுமையாக தொகை செலுத்தப்படும் என உறுதியளித்தனர். அதன் பிறகும் நோட்டீஸ் வந்ததால், சி.ஐ.டி.யு தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கத்தின் தலைமையில் தூய்மை பணியாளர்கள், சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, தரைக்கடை சங்க மாவட்டச் செயலர் மில்லர் பிரபு, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் இ.டி.எஸ்.மூர்த்தி, போக்குவரத்து ஊழியர் சங்கம் மணிமாறன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, தற்போது பணியாற்றும் 263 பேரின் கடன் தொகை 3.16 கோடி ரூபாயும், வட்டித்தொகை 3.50 கோடி ரூபாயும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 135 பேரின் கடன் தொகை 1.50 கோடி ரூபாயும், வட்டித்தொகை 64.40 லட்சம் ரூபாயும், இறந்த தொழிலாளர்கள் 85 பேரின் கடன் தொகை 1.05 கோடி ரூபாயும், வட்டித்தொகை 54.56 லட்சம் ரூபாயும் என மொத்தம் 10.12 கோடி ரூபாயை மாநகராட்சி நிர்வாகம், கூட்டுறவு கடன் சங்கத்திற்கு செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளது. ஆணையர் அளித்த உறுதி அளிப்பின்படி என்.ஓ.சி., சான்றிதழ் மற்றும் தொழிலாளர்களிடம் கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை வட்டியோடு வழங்கிட வேண்டும் என முழக்கமிட்டனர். இது தொடர்பாக, மாநகராட்சி அலுவலர்கள், சிஐடியு நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சி பணியாளர்களின் கூட்டுறவு கடன் சங்கத்திற்காக, பிடித்தம் செய்யப்பட்ட மாதாந்திர தவணை தொகை கடந்த ஜூன் 2017 முதல் டிசம்பர் 2021 வரையில், 5.65 கோடி ரூபாய் அசல் தொகையும் மற்றும் அதற்குண்டான வட்டி, அபராதம் செலுத்தப்படாமல் இருந்ததால், தற்போது 19.48 கோடி ரூபாயாக உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு, தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது ஒரு கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. மீதம் தொகையை ஆறு மாதங்களில் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.