தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சட்டவிரோதப் பணி நீக்கம், சட்ட விரோத சம்பளப் பிடித்தம் போன்றவற்றை கைவிட வேண்டும், சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணி வழங்கப்பட வேண்டும், 8 மணி நேர வேலை அமல்படுத்தப்பட வேண்டும், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப கூடுதலாக 108 ஆம்புலன்ஸ் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் பணியாளர் சங்கம் சார்பிலும் கடந்த 18ஆம் தேதி முதல் கோரிக்கை விளக்க வாகனப் பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாகர்கோவிலில் காலை 8:30 மணி முதல் 10 :30 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை வாகன பிரச்சார கூட்டம் நடந்தது. காலை டெரிக் சந்திப்பில் இருந்து இந்த வாகன பிரச்சார கூட்டம் தொடங்கியது. கோரிக்கை விளக்கி தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினார்கள். பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மாலையில் கன்னியாகுமரியில் இந்த வாகன பிரச்சாரம் நிறைவடைந்தது.