ஆட்சேபனை இல்லா சான்று வழங்காத வங்கி: ரூ. 1.10 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
தீர்ப்பு;
ஒரு முறை தீர்வின் மூலம் கடனைத் திரும்பச் செலுத்தியவருக்கு ஆட்சேபனை இல்லா சான்று வழங்காததால் பாதிக்கப்பட்ட முறையீட்டாளருக்கு வங்கி ரூ.1.10 லட்சம் வழங்குமாறு தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையைச் சேர்ந்தவர் பெ.தமிழரசன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் கல்லூரி படிப்புக்காக தஞ்சாவூரிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.50 ஆயிரம் கல்விக் கடன் வாங்கினார். இக்கடன் நிலுவையில் இருந்த நிலையில், தமிழரசனை வங்கி மேலாளர் அழைத்துப் பேசி ஒரு முறை தீர்வின் கீழ் ரூ.20 ஆயிரம் செலுத்தி முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இதன்படி, தமிழரசன் 2023, ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரூ.15 ஆயிரமும், செப்டம்பர் 25 ஆம் தேதி ரூ.5 ஆயிரமும் செலுத்தி தனது கல்விக் கடன் முழுவதையும் முடித்துக் கொண்டார். ஆனால், வங்கி மேலாளர் தரப்பினர் ஆட்சேபனை இல்லா சான்றை வழங்கவில்லை. இது தொடர்பாக வங்கி மேலாளர் தரப்பினரை பல முறை அணுகி கேட்டும், அவர் தரவில்லை என்றும், ஒரு முறை தன்னை மேலாளர் அவமானப்படுத்தும் வகையில் பேசிவிட்டார் எனவும், இதனால் ஏற்பட்ட இழப்புக்கு வங்கி மேலாளர் இழப்பீடாக ரூ.25 லட்சமும், ஆட்சேபனை இல்லா சான்றும் வழங்க வேண்டும் என்றும் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் தமிழரசன் 2024, நவம்பர் 11 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஆணையத் தலைவர் த.சேகர், உறுப்பினர் கே. வேலுமணி விசாரித்து, வங்கியின் சேவைக் குறைபாடு, அதனால் ஏற்பட்ட மன உளைச்சல், அலைச்சல், துன்பம், பொருள் இழப்பு, வேறு நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற முடியாத சூழ்நிலை ஆகியவற்றுக்காக தமிழரசனுக்கு ஒட்டுமொத்த இழப்பீடாக ரூ.1 லட்சமும், செலவுத்தொகை ரூ.10 ஆயிரமும் சேர்த்து வங்கி தரப்பினர் வழங்க வேண்டும் என புதன்கிழமை உத்தரவிட்டு, தீர்ப்பளித்தனர்.