நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு கடந்த 12-ம் தேதி இயக்க இருந்த

கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு 22 -ம் தேதி இயக்கப்படும் என அறிவிப்பு;

Update: 2025-02-18 03:53 GMT
நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு, கடந்த 2023 -ம் ஆண்டு  அக்டோபர் மாதம் 14 -ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல்  போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால்,  அதே மாதம் 23-ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், சுபம் என்ற கப்பல்  நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து, காங்கேசன் துறைக்கு  'சிவகங்கை' என்ற பெயரில் கப்பல் இயக்க முடிவு செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 16- ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் தனது போக்குவரத்தை தொடங்கியது. வாரத்தில், 5 நாட்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு  காரணங்களுக்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்  தற்காலிமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து கடந்த 12- ம் தேதி தொடங்கவிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டு, தற்போது வருகிற 22-ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது. இனி வாரத்துக்கு செவ்வாய்கிழமை தவிர இதர 6 நாட்களும் கப்பல் இயக்கப்படும் எனவும், டிக்கெட் முன் பதிவுக்கு  www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும், சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இம்முறையாவது கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படாமல் இயக்கப்படுமா என கப்பல் பயணிகள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

Similar News