வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான 127 கிலோ குட்கா பறிமுதல்
குட்கா
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தமிழகஅரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூலிப், பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு வந்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பேரில், போதைப் பொருள் தடுப்பு தனிப்படையினர் பெரியகுளம் அருகே உள்ள t.கள்ளிப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது சுப்பிரமணியின் வீட்டின் ரகசிய அறையில் 8 மூடைகளில் கூலிப், கனேஷ் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்பிலான 127 கிலோ கொண்ட போதைப் பொருட்களை கைப்பற்றிய தனிப்படை காவல்துறையினர் வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியை கைது செய்தனர். மேலும் வீட்டில் போதைப் பொருளை பதுக்கி வைத்து இருந்த முகமது இப்ராஹிம் என்பவர் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து இவரது வீட்டில் பதுக்கி வைத்து இருவரும் தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சுப்பிரமணியை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள பெரியகுளத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவரை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.