கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்- தமிழ்நாடு அரசின் கடந்த 14.03.2025 (வெள்ளிக்கிழமை) அன்று 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள். குறிப்பாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகனாந்தர் பாறையினை இணைத்து கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழைப்பாலத்தை பார்வையிட சின்னமுட்டம் துறைமுகத்தை இரண்டாவது முனையமாக கொண்டு ரூ.2722 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சின்ன முட்டத்திலிருந்து திருவள்ளுவர் சிலை வரை பயணிகள் படகுகள் இயக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்கள். மேலும் குமரி மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட உண்ணாமலைக்கடை வழியாக செல்லும் பட்டணம்கால் பிரதானக்கால்வாயில் 288 மீட்டர் நீளத்திற்கு மூடுகால்வாய் அமைப்பதற்கு ரு.4.72 கோடி மதிப்பிலும், கல்குளம் வட்டம் திக்கணங்கோடு கால்வாயிலும் மூடுகால்வாய் அமைப்பதற்கு ரூ.2 கோடி மதிப்பீட்டிலும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். மேலும் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட இரணியல் கிளைக்கால்வாய் மற்றும் அதன் பகிர்மான வாய்க்கால்களை புனரமைக்கும் பணிக்கு ரூ.6 கோடி மதிப்பிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தொடர்ந்து திருவட்டார் வட்டம் அருவிக்கரை மாத்தூர் தொட்டிபாலம் புனரமைக்கும் பணிக்கு ரூ.60 இலட்சம் நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள். இந்த வகையில் ரூ.13.32 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு தலைமை செயலாளர் , உதவி செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், விவசாயிகள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் நன்றி. என கூறியுள்ளார்.