நவம்பர் 14 குழந்தைகள் தினத்தில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில மாநாடு – திமுக அரசு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரிக்கை, நவம்பர் 14 குழந்தைகள் தினத்தில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு;

Update: 2025-10-11 10:55 GMT
தூத்துக்குடியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஏழாவது மாநில மாநாடு மாநில பொதுச் செயலாளர் டெய்சி மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் ஏ.ஆர். சிந்து தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் திமுக அரசு கடந்த தேர்தல் அறிக்கையில் அளித்த 311வது வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணி நிறைவு நிதி (ஊழியர்களுக்கு ₹10 லட்சம், உதவியாளர்களுக்கு ₹5 லட்சம்) வழங்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஒருமாத கோடை விடுமுறை, நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு வழங்குதல், மேலும் 10 ஆண்டுகள் பணிபுரிந்த உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்குதல் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. மாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டெய்சி மற்றும் ஏ.ஆர். சிந்து தெரிவித்ததாவது: மத்திய அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கு ஒதுக்கும் நிதியை குறைத்து வருகிறது; மேலும் 2018க்குப் பிறகு அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை. மொபைல் வழங்காமல் ஆப்பின் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது; இதனால் இந்தியா முழுவதும் சுமார் 55 லட்சம் தாய்மார்களுக்கு தேவையான சத்தான உணவு வழங்கப்படாமல் இருக்கிறது எனக் கூறினர். இதனை எதிர்த்து வரும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று இந்தியா முழுவதும் தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்றும், வரவிருக்கும் பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்க கோரி அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் மூன்று நாள் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர். மாநாட்டில், மத்திய மற்றும் மாநில அரசுகள் அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Similar News