கள்ளக்குறிச்சியில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் 1,479 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. கள்ளக்குறிச்சி கோர்ட் வளாகத்தில், சட்டப் பணிகள் குழு சார்பில் வாகன விபத்து, சிவில், வங்கி காசோலை வழக்குகளுக்கான, தேசிய லோக் அதாலத் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி சையத் பர்ஹத்துல்லா, தலைமை குற்றவியல் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர். நீதிபதி இருசன் பூங்குழலி பேசுகையில், 'கள்ளக்குறிச்சி கோர்ட்டுகளில், 22 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க மனுதாரர்கள், வக்கீல்கள் ஒத்துழைக்க வேண்டும்,' என்றார். தொடர்ந்து நடந்த அதாலத்தில், மொத்தம் 1,479 வழக்குகள், 6 கோடியே 95 லட்சத்து 79 ஆயிரத்து 502 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டன.நீதிபதிகள் மைதிலி, தனசேகரன், ஹரிஹரசுதன், பானுமதி, ரீனா, வக்கீல் சங்க தலைவர் சேகர், செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.