சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்குகளை கையாண்டதில் ரூ.15¼ கோடி வருவாய்

ரெயில்வே அதிகாரிகள் தகவல்

Update: 2025-01-12 10:11 GMT
சேலம் ெரயில்வே கோட்டத்தில் போத்தனூர், கோவை ஜங்சன், திருப்பூர், ஊத்துக்குளி, ஈரோடு, சேலம், மேட்டுப்பாளையம் மற்றும் கரூர் ெரயில் நிலையங்களில் பார்சல்கள் ஏற்றப்படுகின்றன. மேலும் சேலம் கோட்டத்தில் ஏற்றப்படும் இருசக்கர வாகனங்கள். இரும்பு, சிமெண்டு, பாத்திரங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பார்சல்களாக மராட்டியம், டெல்லி, மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அந்த வகையில் தெற்கு ெரயில்வே கடந்த டிசம்பர் மாதம் 2 மில்லியன் டன்களுக்கு மேல் சரக்குகளை ஏற்றி ரூ.222 கோடியே 44 லட்சம் வருவாய் ஈட்டியது. அதன்படி சேலம் ெரயில்வே கோட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 3 லட்சத்து 72 ஆயிரத்து 469 குவிண்டால் பார்சல்களை ஏற்றியது. இதன்மூலம் ரூ.15 கோடியே 39 லட்சத்துக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டின், இதே காலத்தை விட 12.38 சதவீதம் அதிகமாகும். வருவாயை பொறுத்தவரையில் 9.28 சதவீதம் அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 3 லட்சத்து 31 ஆயிரத்து 437 குவிண்டால் பார்சல்களை கொண்டு சென்றதன் மூலம் ரூ.14 கோடி வருவாய் ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News