பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்து, ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து 6.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணமாகினர்.

Update: 2025-01-12 12:47 GMT
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருப்போர் சொந்த ஊர்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையைப் பொருத்தவரை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் வழக்கமான 2,092 பேருந்துகளுடன் 1,314 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இவற்றில் 1.87 லட்சம் பேர் பயணத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் பயணிப்பதற்காக மக்கள் கூட்டம் பேருந்து நிலையங்களில் குவிந்தனர். இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கடந்த பண்டிகைகளைப் போல விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் சார்பில் அண்டை மாவட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன. தொலைதூர பகுதிகளுக்குச் செல்வோரில் பெரும்பாலானோர் முன்பதிவு செய்த நிலையில், சற்று ஆசுவாசமாக நிலையத்தில் காத்திருந்து பேருந்துகள் வந்தவுடன் ஏறினர். இதுவே முன்பதிவு செய்யாத அண்டை மாவட்ட மக்கள் அனைவரும் பேருந்துகளில் முண்டியடித்து இருக்கைகளை பிடித்து ஆர்வமாக சொந்த ஊர்களுக்கு பயணமாகினர். இவ்வாறு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் 2 நாட்களில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் 2 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்திருந்தனர். அதில் கட்டண விதிமீறலை கண்காணிக்கும் பணியை போக்குவரத்து துறையின் குழுக்கள் மேற்கொண்டன. இக்குழுவினர் வரி செலுத்துதல் உள்ளிட்டவற்றின் விதிமீறல்களை ஆய்வு செய்து அபராதம் விதித்தனர். இவ்வாறு கடந்த 2 நாட்களில் மட்டும் அரசு பேருந்து, ரயில்கள், ஆம்னி பேருந்து ஆகியவற்றில் 6.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இதற்கிடையே, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில், பொங்கலை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி பயணிக்க முதல்வர் உத்தரவின்பேரில் 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 22,676 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இவ்வாறு பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக 44,580 பேருந்துகள் இயக்கபட உள்ளன. எந்தவித இடையூறும் இன்றி பயணிக்கும் வகையில் சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Similar News