ரேஷன் பொருட்கள் தரம் குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் ஆய்வு
இளையனார்வேலுார் ஊராட்சியில் ரேஷன் பொருள் தரம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டாரம், இளையனார்வேலுார் ஊராட்சியில் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்.அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை பார்வையிட்ட அவர், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். அதை தொடர்ந்து, அப்பள்ளியின் சத்துணவுக்கூடத்திற்கு சென்ற அவர், மாணவர்களுக்கு வழங்குகின்ற மதிய நேர உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, அப்பகுதி அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் தரம் மற்றும் இருப்புநிலை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, இளையனார்வேலுாரில், 15 பழங்குடியினர் குடும்பத்தினருக்காக 76.05 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் இலவச வீட்டுக்கான கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். சார் ஆட்சியர் ஆஷக்அலி மற்றும் இளையனார்வேலுார் ஊராட்சிமன்ற தலைவர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.