காவிரி ஆற்றில் மூழ்கிய 15 வயது சிறுவனை மீட்ட காவல், தீயணைப்பு வீரருக்கு பாராட்டு
பாராட்டு;
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே மேலமுருக்கங்குடி பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் முரளிதரன் (15),. இவர் செவ்வாய்க்கிழமை தைப்பூசம் விடுமுறை தினம் என்பதால், நண்பர்களுடன் திருவிடைமருதைர் மகாலிங்க சுவாமி கோவிலில் நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது, காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த முரளிதரன், ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி கூச்சலிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருவிடைமருதூர் காவல்துறையைச் சேர்ந்த செந்தில், தீயணைப்பு துறை வீரர் ராஜீவ்காந்தி இருவரும் ஆற்றில் குதித்து, சிறுவனை பாதுகாப்பாக மீட்டு முதலுதவி அளித்து திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மீட்பு பணியின் போது, ஆற்றில் உடைந்து கிடந்த கண்ணாடி துண்டுகளால், தீயணைப்பு வீரர் ராஜீவ்காந்திக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டு, திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் முன்று தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து, நேற்று ஒரு விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்றிய, காவலர் செந்தில், தீயணைப்புத்துறை வீரர் ராஜீவ்காந்தி இருவரையும், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம், நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.