
தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலக வளாக கட்டடத்தில், வட்டார கல்வி அலுவலக இருப்பு அறை உள்ளது. இங்கு, அரசு பள்ளிக்கு வழங்க வேண்டிய சீருடை, பாடபுத்தகம் உள்ளிட்ட பொருட்கள் இருப்பில் வைக்கப்படுவது வழக்கம். ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க, 'டேப்லட்' எனும், கையடக்க கணினிகள் மொத்தம், 218 வந்தன. இதில், 191 டேப்லட்டுகள் ஆசிரியர்களுக்கு தரப்பட்ட நிலையில், மீதம், 27 'டேப்லட்'கள் அறையில் இருப்பு வைக்கப்பட்டன.கடந்த, 15ம் தேதி, அந்த அறையில் இருந்த பொருட்களை வேறு கட்டடத்திற்கு மாற்றும் பணி நடந்தது. தொடர்ந்து, 25ம் தேதி இருப்பில் உள்ள பொருட்களை பதிவறை எழுத்தர் சரிபார்த்தார். அப்போது அதில், 15 டேப்லட்டுகள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.