தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1.5 டன் பறிமுதல்... கடைகளுக்கு ரூ.22,500 அபராதம்
அபராதம்;
தஞ்சையில் குடோன், கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள் நடத்திய சோதனையில் 1.5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ரூ.22,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. தஞ்சை மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில், மாநகராட்சி ஆணையர் கண்ணன் வழிகாட்டுதலில் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அவ்வாறு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அவற்றை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். இந்த நிலையில், புதன்கிழமை தஞ்சை மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மேற்பார்வையில் பொது சுகாதார பிரிவினர் குழுக்களாக சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுகாதார அலுவலர்கள் சீனிவாசன், ரமேஷ், சேவியர், ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் எபின்சுரேஷ், அனிபா, மோகன் ஆகியோர் வடக்கு வீதி அய்யங்கடை தெரு பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் சுகாதார விழிப்புணர்வு தொடர்பாக அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அந்த பகுதியில் உள்ள ஒரு குடோன் மற்றும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1.5 டன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாகனத்தில் ஏற்றி அரியலூரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.