பொங்கலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து 17 பேர் காயம்

பொங்கலூர் அருகே பனியன் நிறுவன வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயம் அடைந்த னர்.;

Update: 2025-04-04 04:27 GMT
பொங்கலூரை அடுத்த நொச்சிப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து தொழிலாளர்களை வேன் மூலம் அழைத்துச்செல்வது வழக்கம். வழக்கம்போல் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு தாராபுரம் ரோடு ரேவதி ரைஸ்மில்லில் இருந்து உகாயனூர் செல்லும் சாலையில் வேன் வந்து கொண்டிருந்தது.வேனை டிரைவர் மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்தார். பல்லவராயன் பாளையம் அருகே வளைவில் திரும்பும் போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் வேன் ஒரு புறமாக சாய்ந்து கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த 17 பேரும் உள்ளே சிக்கி காப்பாற்றுமாறு சத்தம் போட்டனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர். பின்னர் காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் தாராபுரம் மில் காலனியை சேர்ந்த அன்னம்மாள் (வயது 47), வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரலேகா (27), தாராபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தியா (24), கொடுவாய் எல்லப்பாளையத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி என்கிற சங்கீதா (45), தெற்கு அவினாசிபாளையம், செங்காட்டுபாளையத்தை சேர்ந்த பெரியம்மாள் (45) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்ததினால் தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 12 பேரும் லேசான காயமடைந்ததால் அவர் கள் முதலுதவி சிகிச்சைக்கு பின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News