இணையவழி வா்த்தகத்தில் ரூ.18 லட்சம் மோசடி: இளைஞா் கைது
இணையவழி வா்த்தகத்தில் ரூ.18 லட்சம் மோசடி: இளைஞா் கைது
இணைய வழி வா்த்தகத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, ரூ.18 லட்சத்தை மோசடி செய்த இளைஞரை திண்டுக்கல் இணையக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சாய்நாத் (30). இவரது கைப்பேசி எண்ணுக்கு கட்செவி அஞ்சல், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் இணையவழி வா்த்தகத்தில் ஈடுபட்டால் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என குறுந்தகவல்கள் வந்தன. இதை நம்பிய சாய்நாத், குறுந்தகவலில் வந்த கைப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டாா். அப்போது பேசிய நபா், வங்கிக் கணக்கு எண்களைத் தெரிவித்து, அதில் பணம் செலுத்தினால் இரட்டிப்பாகத் தருவதாகத் தெரிவித்தாா். இதன்பேரில், அந்த வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.18 லட்சம் வரை செலுத்தினாா். இந்த பணம் இரட்டிப்பாக மாறி இருக்கும் என்ற நம்பிக்கையில், பணத்தை எடுக்க முற்சித்தாா். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சாய்நாத், திண்டுக்கல் மாவட்ட இணைய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில் சாய்நாத் அனுப்பிய பணம், சென்னை திருவல்லிக்கேணியைச் சோ்ந்த முகமது இப்ராகிம் (34), வங்கி கணக்குக்கு சென்றது உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, திருவல்லிகேணிக்கு சென்ற போலீஸாா் முகமது இப்ராகிமை கைது செய்து, திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனா்.