இழப்பீடு வழங்காததால் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி
திருச்சியில் விபத்துக்கான இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின்பேரில் 2 அரசுப் பேருந்துகள் திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டன.;
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (56). மணப்பாறை நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 3.10.2018 அன்று தனது மனைவி புஷ்பவள்ளியுடன் மணப்பாறை-கோவில்பட்டி பிரதான சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில், பலத்த காயமடைந்த பொன்னுசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். புஷ்பவள்ளி காயங்களுடன் உயிா் தப்பினாா். இந்த விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இது தொடா்பாக திருச்சி மாவட்ட சிறப்பு மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 30.6.2023 அன்று தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில் பொன்னுசாமி மனைவி புஷ்பவள்ளிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 28 லட்சத்து 49 ஆயிரத்து 589 தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி நந்தினி உத்தரவிட்டாா். ஆனால் அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகம் உரிய இழப்பீட்டை வழங்கவில்லை. இதைத் தொடா்ந்து புஷ்பவள்ளி, தனக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி நீதிமன்றத்தில் நிறை வேற்று மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிபதி நந்தினி அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 2 பேருந்துகளை ஜப்தி செய்ய அண்மையில் உத்தரவிட்டாா். இதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 2 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியுள்ளனா்.