ஓடும் ரெயில்களில் மயங்கி விழுந்து தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
போலீசார் விசாரணை;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கைலாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 65). இவர் நேற்று காலை பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஓசூரில் இருந்து ஈரோடு நோக்கி பயணம் செய்து கொண்டு வந்தார். இவருடன் 2 மகள்கள் மற்றும் பேரன்கள் வந்தனர். இந்த ரெயில் சேலம் வந்தபோது திடீரென மாதம்மாள் மயங்கி விழுந்தார். இது குறித்து அங்கு இருந்தவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் மற்றும் டாக்டர்கள் ரெயில்பெட்டிக்கு விரைந்து சென்று அந்த மூதாட்டியை பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை ரெயில்வே போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் திப்ரூகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கு வங்காளத்தில் இருந்து கட்டிட வேலைக்காக 9 பேர் சென்றனர். காட்பாடி ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்த போது அவர்களில் முஜிப்பூர் ரகுமான் (42) என்பவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதால் சேலம் ரெயில்வே போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த ரெயில் சேலம் வந்தவுடன் ரெயில்வே டாக்டர்கள் முஜிப்பூர் ரகுமானை பரிசோதித்து பார்த்ததில் அவர் இறந்தது தெரிய வந்தது, அவரது உடலை ரெயில்வே போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்கள் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.