அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மாற்றுத்திறனாளி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி

மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்;

Update: 2025-03-30 03:01 GMT
அரியலூர் மாவட்டம் செந்தூர் அருகே உள்ள கீழ்ராயன்புரம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 22), மாற்றுத்திறனாளி. பட்டதாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த வித்யா (39) என்பவர் தனக்கு நண்பர் மூலம் அறிமுகமானார். அப்போது அவர் என்னிடம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியை வாங்கி தருவதாக தெரிவித்தார். இதற்காக அவர் என்னிடம் ரூ.5 லட்சம் கேட்டார். பின்னர் அவரிடம், நான் வேலைக்காக ரூ.2 லட்சம் கொடுத்தேன். ஆனால் வித்யா தனக்கு அந்த வேலையை வாங்கி கொடுக்கவில்லை. எனவே மோசடி செய்த அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாற்றுத்திறனாளி வாலிபரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக வித்யாவை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வேறு யாரிடமாவது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News