மாநகராட்சியில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிகாரிகள் தகவல்

ஈரோடு மாநகராட்சியில் சேகரிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தனியார் சிமெண்ட ஆலைக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை;

Update: 2025-04-07 03:17 GMT
ஈரோடு மாநகராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை, கரூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் தலா 15 வார்டுகள் என 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கீழ், தூய்மைப் பணியாளர்கள் மூலம் தினசரி, மக்கும், மக்காத குப்பை 180 டன் முதல் 2-10 டன் வரை சேகரமாகிறது. இதில், 70 டன் முதல் 80 டன் வரை மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகிறது. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருவதால், அவை மலைப் போல் குவிந்துக் காணப்படுகிறது.குறிப்பாக, மக்கும் கழிவுகள் நுண்ணுயிர் உரக்கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் தான் மலைப் போல் குவிந்து, துர்நாற்றம் வீசுவதால், வெண்டிப்பாளையம் குப்பைக் கிடங்கை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கை விரைவில் அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் குவிந்து காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் 70 முதல் 80 டன் வரையிலான பிளாஸ்டிக் கழிவுகளை, கரூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் நடத்தியது.அதனைத்தொடர்ந்து, தனியார் சிமெண்ட் ஆலை நிர்வாகத்துடன், மாநகராட்சி நிர்வாகம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :ஈரோடு மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் 100 டன் முதல் 120 டன் வரையிலான மக்கும் கழிவுகளை எந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பப்பட்டு 40 நாட்கள் மக்கிய பிறகு அவற்றை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.மக்காத மறுசுழற்சிக்கு பயன்படும் சில வகையான கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகின்றனர். மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் மூலம், மாநகராட்சியில் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News