திண்டுக்கல் மாநகரிலுள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் மஹாராஜன் தாடிக் கொம்பு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். பளுதூக்கும் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் மஹாராஜன் மாவட்ட அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று 12 பதக்கங்களுக்கு மேல் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து மாநில அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் 90கிலோ பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை பெற்றார். தமிழ்நாடு அமெச்சூர் பவர் லிப்டிங் பெடரேசன் சங்கத்தினர் மாணவர் மஹாராஜனை தேசிய அளவில் குவாலியரில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பங்கேற்கச் செய்தனர். அந்த போட்டியில் தங்க பதக்கம் வென்ற பின்பு உலக அளவில் தாய்லாந்தில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட 90கிலோ அன்எக்யூப்டு பளுதூக்கும் பிரிவில் திண்டுக்கல்லை சேர்ந்த மஹாராஜன், 2ம் பரிசை பெற்றார். வெற்றி பெற்ற வீரர் மஹாராஜன் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து தாய்லாந்தில் வென்ற பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.