தஞ்சாவூர் மாவட்டத்தில், 2 லட்சத்து 18 ஆயிரத்து 290 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள் வழங்கல்
விலையில்லா பாடநூல்கள்;
- தஞ்சாவூர், அரண்மனை வளாகம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பின்னர் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கூறியதாவது, "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்களோடு, புத்தகப்பைகள், காலணிகள் (Footwear’s), காலேந்திகள் (Shoes), காலுறைகள், மழைக்கோட்டுகள், கம்பளிச்சட்டைகள், வண்ணப்பென்சில்கள், கிரையான்ஸ், கணித உபகரணப் பெட்டிகள், கணுக்காலேந்திகள் (Ankle boot) மற்றும் புவியியல் வரைபடங்கள் என பல்வேறு கல்வி உபகரணங்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 197 (இடை நிலை) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 76,471 (1 முதல் 12 ஆம் வகுப்பு வரை) மாணாக்கர்கள், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 94 (இடை நிலை) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 52,856 (1 முதல் 12 ஆம் வகுப்பு வரை) மாணாக்கர்கள், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 738 (தொடக்கக் கல்வி) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 52,463 (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) மாணாக்கர்கள், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 648 (தொடக்க கல்வி) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 36,500 (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) மாணாக்கர்கள் என மொத்தம் 1,677 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2,18,290 மாணாக்கர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயன் பெறுகிறார்கள்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.அண்ணா துரை, மாவட்ட கல்வி அலுவலர்கள் இ.மாதவன், கா.பழனிவேலு, இரா.சுந்தர், எம்.அய்யாகண்ணு, மதியழகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் எம்.ரவிச்சந்திரன், சமூக நல அலுவலர் ஆர்.டி.லதா, தஞ்சாவூர் வட்டாட்சியர் சிவகுமார், மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சந்திரமௌலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.