பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 27,174 பேர் பங்கேற்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வு;
தமிழகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 174 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 13 ஆயிரத்து 9 மாணவர்களும், 14 ஆயிரத்து 658 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 667 பேர் பங்கேற்று எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 70 மையங்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 40 மையங்களும் என மொத்தம் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேர்வில் 27 ஆயிரத்து 174 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர். 493 பேர் வரவில்லை. மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 205 பேரும், மாணவிகள் 145 பேரும் தேர்வு எழுத உரிய வசதிகள் செய்யப்பட்டன. தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 155 பறக்கும் படை அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டனர். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள அரசர் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வை மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டார். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலர் இரா. அண்ணாதுரை உடனிருந்தார்.