வாகனங்களை சேதப்படுத்திய 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது : தப்பி ஓட முயன்றவருக்கு கால் முறிவு!

கோவில்பட்டியில் நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-03-13 08:21 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜ புரம் தெருவில் நேற்று நள்ளிரவு 3 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், வேன் மற்றும் வீட்டு ஜன்னல்களை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி வேன் உரிமையாளர் சங்கர் நாராயணன் என்பவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கோழி கார்த்திக் (21) மற்றும் இரண்டு சிறுவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் பதுங்கி இருப்பதாக கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய நவநீதகிருஷ்ணன், தனிப்படை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் செல்லத்துரை, சுரேஷ், அருண் விக்னேஷ் கொண்ட குழுவினர் அங்கு சென்றபோது, மூன்று பேரும் போலீசாரை பார்த்து தப்பி ஓடி உள்ளனர்.  சிறுவர்கள் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்த நிலையில், கார்த்திக் என்ற கோழி கார்த்திக் தப்பி ஓட முயன்ற போது கால் தடுக்கி கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். கீழே விழுந்து காயம் அடைந்த கார்த்திக் என்ற கோழி கார்த்திக்கை சிகிச்சைக்காக போலீசார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுவர்கள் இருவரையும் நெல்லையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் என்ற கோழி கார்த்திக்கிற்கும் - காயம் அடைந்துள்ள சங்கரநாராயணனுக்கும் முன் விரோதம் இருந்ததாகவும், முன் விரோதம் காரணமாக தான் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் , சங்கரநாராயணன் வேனை மட்டும்தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கியதாகவும், பத்து இருசக்கர வாகனங்களை தாக்கவில்லை என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News